Sunday, January 19, 2020

Kolaru Pathigam lyrics in Tamil - கோளறு பதிகம்

கோளறு பதிகம்




வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
          மிக நல்ல வீணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி
          சனி பாம்பிரண்டும்  உடனே
ஆசறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 1 ||

என்பொடு கொம்பொடு  ஆமை இவை மார்பு  இலங்க
          எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து, என்
          உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஓன்றொடு ஏழு பதினெட்டொடு, ஆறும்
          உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 2 ||

உருவளர் பவளமேனி ஒளிநீறு  அணிந்து
          உமையோடும், வெள்ளை விடைமேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்,
திருமகள், கலையது  ஊர்தி, செயமாது, பூமி,
          திசை தெய்வம்  ஆன பலவும்,
அருநெதி; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 3 ||

மதி நுதன் மங்கையோடு, வடஆல் இருந்து
          மறை யோதும்  எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன், அங்கி, நமனோடு தூதர்
          கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 4 ||

நஞ்சு அணி கண்டன், எந்தை மடவாள் தனோடும்
          விடையேறு நங்கள் பரமன்,
துஞ்சு இருள், வன்னி கொன்றை முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உருமிடியும் மின்னும்
          மிகையான பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார்  அவர்க்கு மிகவே.          || 5 ||

வாள்வரி அதளஅது ஆடை வரி கோவணத்தர்
          மடவாள் தனோடும் உடனாய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என்
          உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
          கொடு நாகமோடு கரடி
ஆள்அரி நல்ல நல்ல, அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 6 ||

செப்பு இள முலை நன்மங்கை ஒருபாகமாக
          விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகையான பித்தும்
          வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார்  அவர்க்கு மிகவே.          || 7 ||

வேள்பட விழிசெய்து அன்று, விடைமேல் இருந்து
          மடவாள் தனோடும் உடனாய்,
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து, என்
          உளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் றனோடும்
          இடரான வந்து நலியா;
ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 8 ||

பலபல வேடம் ஆகும்-பரன் நாரி பாகன்
          பசுவேறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
          வருகாலம் ஆன பலவும்
அலைகடல் மேரு நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 9 ||

கொத்து அலர் குழலியோடு விசையற்கு நல்கு
          குணமாய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
          திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 10 ||

தேன் அமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
          வளர் செம்பொன் எங்கும் திகழ,
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
          மறை ஞான ஞான முனிவன்,
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
          நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
          அரசாள்வர் ஆணை நமதே.          || 11 ||

--- சுபம் ---

No comments:

Post a Comment