Friday, February 3, 2023

உடம்பிடித் தெய்வாஷ்டகம் - Utampidi deivashtakam in Tamil

 உடம்பிடித் தெய்வாஷ்டகம்


உலவும் பானு சதகோடி
     உருவாய்த் திகழும் ஒளிவடிவேல்;
சுலவும் ஞானத் திரள் எல்லாம் 
     தொகுத்து வடித்த திருநெடுவேல்;
நிலவும் வீரம் அறத்தோடு
     நீதி வடிவாய்த் துலங்கும் வேல்;
நிலைநின் றலைக்கும் அவிச்சையிருள்
     நில்லா தோடும் சுடர்வைவேல்;

 சூர்மா முதலைத் தடிந்த வேல்
     துட்டக் கவுஞ்சம் துளைத்த வேல்;
கார்மாக் கடல்நீர் நெருப்பாகக்
     கனன்று கொதிக்கச் சினந்தவேல்;
போர்மா வலத்தின் அசுரகுலம்
     பொடியாய்ப் பறந்து கடல்தூர்க்கத்
தேர்மாக் கலபத் தேறிவரும்
     செந்திற் கந்தன் திருக்கைவேல்.

 குமுறிக் குமுறி அழுது மனம்
     குலைந்து சிறையில் வருந்திநின்ற
அமரர் குலத்தை ஈடேற்றி
     அமரா வதியிற் குடியேற்றும்
விமலன் வனசக் கரத்தமர்வேல்;
     வென்றி வடிவேல்; சண்முகவேல்;
கமலன் படையைச் சிவன் படையைக்
     கடுகிப் பிடிந்து விழுங்கும்வேல்.

 அடியார் மீது வருங் கூற்றை
     அலறக் குத்தித் துரத்தும் வேல்;
முடியாப் பிறவிப் பெருங்கடலை
     முழுதம் வற்றப் பருகும் வேல்;
விடியா மாயைப் பெருங்கங்குல்
     விடியும் வண்ணம் மின்னும் வேல்;
ஓடியாத் தவத்துத் தொண்டன் கால்
     ஒடிந்த எலும்பை ஒட்டும் வேல்;

 கந்த முனிவன் நாவிருந்து
     கவிதை மாரி கொட்டும் வேல்;
சந்த வண்ணச் சரபத்தின்
     தலைமேற் பாறை விழாதபடி
முந்திச் சென்று காக்கும் வேல்;
     மூகன் நாவை அசைத்தினிய
கந்தர் கலிவெண் பாவருளிக்
     கனிவிற் கேட்டு மகிழும்வேல்.

 காட்டிற் சிக்கித் தடுமாறும்
     கருணை அருண கிரிக்குவழி
காட்டிச் செல்லும் வழித்துணை வேல்;
     கனிந்து பழுத்த பத்திமையால் 
பாட்டிற் சிறந்த நடேசகவி 
     ராசன் பாடும் நூலெல்லாம்
ஏட்டு வடிவம் பெறத் தக்கோர்
     இதயத் திருந்து தூண்டும் வேல்.

 நம்பிக் குகனை அலங்கரித்து
     நாளுங் கண்டு மனங்குளிரும்
தம்பிச் சாமி கண்ணைவிட்டுச்
     சற்றும் அகலா தொளிரும்வேல்;
எம்பி ரான்சுந் தரசாமி
     இயற்றும் பூசைக் குண்மகிழ்ந்து
செம்பொன் மாரி பொழிவித்துத்
     தெய்வத் தொண்டிற் குதவும் வேல்.

 வேலே ஞானம்; குமரன் கை
     வேலே தியானம்; குகன்கரத்து
வேலே சக்தி; செவ்வேள்கை
     வேலே புக்தி; இளமுருகன்
வேலே முத்தி; சரவணன்கை
     வேலே சகல சௌபாக்யம்;
வேலே தெய்வம்; பிறதெய்வம்
     வேறொன் றில்லை இல்லையே.

No comments:

Post a Comment