Monday, February 6, 2023

VAIRAGYA SLOKAS - வைராக்ய ஸ்லோகங்கள்

ஆதிசங்கரரின் வைராக்ய ஸ்லோகங்கள்.


    ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்ரதை'' என்று கத்திக்கொண்டே போவான்.  ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று. அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே, பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு 'ஜாக்ரதை' சொல்லிக்கொண்டு அப்பன் வேலையை செய்தான். 

    அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான். அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான். ''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?'' காவல் காரன் நடுங்கினான். ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக? முதல் நாள் இரவு பையன் ''ஜாக்ரதை, ஜாக்ரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை. ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது. அந்த நீதி வாக்யங்களை பார்ப்போமா. ஜாக்ரதையாக இருக்க வேண்டாமா?

    ஆதி சங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சிலவற்றை மட்டும் இங்கே ருசிப்போமா?

மாதா நாஸ்தி பிதா நாஸ்தி  
நாஸ்தி பந்து ஸஹோதரஹ
அர்த்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி 
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரத        (1)

(அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை.)

ஜன்ம துக்கம், ஜரா துக்கம், 
ஜாயா துக்கம் புந: புந: 
சம்ஸார ஸாகரந் துக்கம் 
தஸ்மாத் ஜாக்ரத: ஜாக்ரத        (2)

(பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக்கொள் ஜாக்ரதை.)

காமஶ்ச குரோதஶ்ச லோபஶ்ச 
தேஹே திஷ்டந்தி தஸ்கராஹா
ஞன ரத்னா பஹாராய 
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரத!        (3)

(ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.)

ஆஷாயா பத்யதே ஜந்து: 
கர்மணா பஹு சிந்தயா, 
ஆயுக்ஷீணம் ந ஜாநாதி, 
தஸ்மாத் ஜாக்ரத: ஜாக்ரத:        (4)

(ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை மன்னார்சாமிகள், அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.)

ஸம்பத: ஸ்வப்ன ஸங்காஷாஹா 
யௌவனம் குஸுமோபம்,
விதுச்சன்ச சல ஆயுஷம் 
தஸ்மாத் ஜாக்ரத: ஜாக்ரத:        (5)

(நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல தம்பி, நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.)

க்ஷணம் வித்தம், க்ஷணம் சித்தம், 
க்ஷணம் ஜீவிதமாவயோஹோ
யமஸ்ய கருணா நாஸ்தி, 
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரத        (6)

(சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை.)

யாவத் காலம் பவேத் கர்ம: 
தாவத் திஷ்டந்தி ஜந்தவ:
தஸ்மின் க்ஷீணே விந்ஷ்யந்தி 
தத்ர கா பரிதேவனா.        (7)

(சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும், நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு. அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான்.  இதில் என்ன யோசிக்க இருக்கிறது. மேடையில் ஏறியாச்சு, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை!!!)

ஶ்ரீ குருப்யோ நம: ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.



No comments:

Post a Comment