வைகுண்ட_ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி பிறந்த கதையும், சொர்க்க வாசல் பிறந்த கதையும்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் செவ்வித் திருக்காப்பு.
இந்துக்களின் மிக முக்கிய விஷேசங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதத்தில் நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம். இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நன்நாளாகும்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’ என இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைப்பெறுகிறது. பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஏகாதசி' என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில், `பதினொன்று' என்று பொருள். 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது.
இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசி அன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது .ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.
சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.
தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார். “நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகா லட்சுமி நாராயணன் வரமளித்தார்.
பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன். இதனால் இந்த தினத்தை வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும். மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன.
கண் விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார். அப்போது அவரின் இரு காதுகளிலிருந்து காது அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் என இரு அரக்கர்களாக உருவெடுத்தன.
அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை அந்த இரட்டையர்கள் திருடி சென்றார்கள் . அப்போது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களை திரும்ப கொண்டு வந்தார்.
பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க இறைவன் புறப்பட்டார்.
மது, கைடபருடன் போரிட்ட பெருமாள் அவர்களை அழிக்க முற்பட்டார். அப்போது அந்த சகோதரர்கள் சரணடைந்தனர்.
உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் நமோ நாராயணா என கேட்டுக் கொண்டனர்.
அவ்வாறே அவர்களுக்கு பெருமாள் அருளினார். மேலும் எங்களைப் போல பலரும் இந்த பாக்கியத்தைப் பெற வேண்டும் எனப்தற்காக திருமாலிடம் கேட்டுக் கொண்டனர்.
அதோடு வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தையும், எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கு முக்தியும் அளிக்க வேண்டும் கோவிந்தா என அசுர சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதன் காரணமாக தான் வைகுண்ட வாசல் உருவானது. அதோடு மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷிகேஷா, பத்மநாபா ஸ்ரீ ராமா
மேலாம் பதத்தையும் நாலாம் பதத்தையும் விளங்கக் கொடுக்கு நாமம் நாராயணாஹரி கோவிந்தா வென்று தினம் நாடிவரு திருநாமமே!
************************************************************
No comments:
Post a Comment